சுதந்திர போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது கவர்னர் ரவி வேதனை
சுதந்திர போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது கவர்னர் ரவி வேதனை
ADDED : ஜன 23, 2025 12:40 AM

சென்னை:''சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் குறிப்பிடவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சுதந்திரப் போராட்ட வரலாறு சுருக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்றதாக எழுதப்பட்டுள்ளது,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத், அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 128வது பிறந்தநாள் விழா, நேற்று சென்னை அண்ணா நகரில் நடந்தது. விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
நேதாஜி குறித்து நிறைய கற்றுக் கொள்ளுங்கள். நமது நாடு சுதந்திரம் பெற்ற பின், சுதந்திரப் போராட்ட வரலாறு சுருக்கப்பட்டது.
குறிப்பிட்ட சிலர் மட்டுமே பங்கேற்றதாக எழுதப்பட்டது. நாடு முழுதும் எண்ணிலடங்காத மக்கள், தங்கள் உயிரை சுதந்திரத்திற்காக கொடுத்துள்ளனர்.
'தமிழ்' மண் பல உயிர்களை சுதந்திரத்திற்கு விலையாகக்கொடுத்திருக்கிறது.
சுதந்திரத்திற்காக உயிரை கொடுத்தவர்களின் பெயரை, வரலாற்றில் இருந்து நீக்கிவிட்டால், அது அவர்களின் மரியாதையை இழக்கச் செய்யும் செயலாகும்.
அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துச் சென்றது போல், விடுதலைப் போராட்ட காலத்தில், நம் மக்கள் நாடு கடத்தப்பட்டனர்.
இதுகுறித்து, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் குறிப்பிடவில்லை. இதுபோன்ற வரலாற்றை தெரியாமல், சுதந்திரத்தின் அருமையை தெரிந்து கொள்ள முடியாது.
தமிழகத்திற்கு, கவர்னராக வந்தபோது, என்னிடம் 40க்கும் குறைவான சுதந்தரப் போராட்ட வீரர்களின் பெயர்களை கொடுத்தனர். நான் அதை நம்பவில்லை.
தெளிவாக கணக்கெடுத்த பிறகு, ஆயிரம் பெயர்கள் கிடைத்தன. சுதந்திரத்திற்காக மட்டுமல்ல; நாட்டை உலகின் தலைமை நாடாக முன்னெடுக்க வேண்டும் என்ற கனவோடு, அவர்கள் போராடினர்.
மாணவர்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. மிகப்பெரிதாக வளருங்கள்; சிறிய எண்ணங்கள் வேண்டாம். பத்து ஆண்டுகளுக்கு முன், அனைத்து துறைகளிலும் பின்தங்கி, 300- - 400 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.
இன்று, 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன், உலகில் மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறோம்.
வளர்ச்சிக்கு எல்லையே இல்லை; நீங்கள் வளர்ச்சியடைந்தால், உங்கள் வீடும், ஊரும், நாடும் வளர்ச்சி அடையும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக பணியாற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

