ADDED : ஜன 06, 2025 02:55 PM

சென்னை: தமிழக சட்டசபை மரபை கவர்னர் காக்க வேண்டும் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டசபையின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டசபையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்படும் கவர்னர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டசபை மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஒவ்வொரு முறை சட்டசபை கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் கவர்னருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டசபை நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.