அண்ணா பல்கலையில் பாதுகாப்பு மேம்படுத்த கவர்னர் உத்தரவு!
அண்ணா பல்கலையில் பாதுகாப்பு மேம்படுத்த கவர்னர் உத்தரவு!
UPDATED : டிச 28, 2024 01:48 PM
ADDED : டிச 27, 2024 06:05 PM

சென்னை: மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலையில் இன்று தமிழக கவர்னர் ரவி ஆய்வு மேற்கொண்டார். பல்கலை வளாகத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும் உத்தரவிட்டார்.
சென்னை அண்ணா பல்கலையில் கடந்த 23ம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில், பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
இந்நிலையில், பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, இன்று அண்ணா பல்கலையில் ஆய்வு மேற்கொண்டார். பல்கலையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, கேட்டறிந்தார். சிசிடிவி கண்காணிப்பு, அனைத்து நுழைவாயில்களிலும் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கவர்னருடன் உயர்கல்வித்துறை செயலாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர். பல்கலை வளாகத்தில் இருந்த மாணவர்கள் 10 பேரிடம் கவர்னர் நேரடியாக பேசி, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
மாணவியர், பணிபுரியம் பெண்கள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்த கவர்னர், எதிர்காலத்தில் எத்தகைய சர்ச்சையும் எழாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.