எண்ணுார் கோரமண்டல் ஆலையை திறக்க தீர்ப்பாயத்தில் அரசு நிபந்தனை
எண்ணுார் கோரமண்டல் ஆலையை திறக்க தீர்ப்பாயத்தில் அரசு நிபந்தனை
ADDED : மார் 05, 2024 11:36 PM
சென்னை:'விதிகளை பின்பற்ற தயாராக இருந்தால், சென்னை எண்ணுாரில் உள்ள கோரமண்டல் உர ஆலையை, மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அனுமதி
சென்னை எண்ணுார் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, கடந்த டிச., 26 நள்ளிரவில், திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் வசித்தவர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து, பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது. அதாவது, 'கோரமண்டல் ஆலையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதை பின்பற்ற கோரமண்டல் ஆலை தயாராக இருந்தால், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் ஆய்வு
அதைத் தொடர்ந்து கோரமண்டல் ஆலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் அறிவுறுத்தல்களை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால், சில அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
'தற்போது பாதிக்கப்பட்ட குழாய் அருகில், மக்கள் போராட்டம் நடப்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
'தொழிற்சாலை அமைக்கும் நிபுணர்கள் குழுவுடன், அரசு அமைத்த நிபுணர்கள் குழு மீண்டும் ஆய்வு செய்த பின் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.
அதைத் தொடர்ந்து தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், அரசு நிபுணர்கள் குழு அளித்த அறிவுறுத்தல்களில், எதை பின்பற்ற முடியாது என்பதையும், அதற்கான காரணங்களையும் கோரமண்டல் ஆலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.

