ராத்திரியில் நடக்கும் தவறுகளுக்கு அரசு பொறுப்பேற்காது: ரகுபதி
ராத்திரியில் நடக்கும் தவறுகளுக்கு அரசு பொறுப்பேற்காது: ரகுபதி
ADDED : அக் 02, 2024 08:47 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
தி.மு.க.,வில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனின் குரலாக தான் உதயநிதி துணை முதல்வர் பதவி ஏற்றுள்ளார். அவரால் தி.மு.க., புத்துயிர் பெறும்; வளர்ச்சி பெறும். முதல்வரின் கூற்றுப்படி, வரும் சட்டசபை தேர்தலில் 200 என்ற இலக்கை அவருடைய உழைப்பால் பெற்று விடுவோம்.
காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என கவர்னர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் தினந்தோறும் மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது. திருடர்கள் சுவர் ஏறி குதித்து இரவில் திருடினால், அதற்கு அரசு எவ்வாறு பொறுப்பேற்பது?
கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது செல்போன் வீசப்பட்டதா, விழுந்ததா என்பது மர்மமாக உள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து, அவர்களே இன்னும் உறுதியாக எதையும் சொல்லவில்லை. அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி குறைந்திருப்பதாக, பழனிசாமி ஆதங்கப்பட்டுள்ளார். அக்கட்சிக்கான ஓட்டுக்கள் இன்னும் குறையத் தான் செய்யும். இருக்கும் ஓட்டை தக்கவைப்பதே சவாலானதுதான். பா.ஜ.,வை கடுமையாக எதிர்த்ததால் தான் மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது தவறானது.
சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை கவர்னருக்காக நான் புறக்கணிக்கவில்லை. நான் புறக்கணிப்பதாக இருந்தால், கடந்த ஆண்டு புறக்கணித்திருப்பேன்.
இவ்வாறு ரகுபதி கூறினார்.

