ADDED : ஜன 12, 2024 12:18 AM
சென்னை:''வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனை காப்பதில், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை முன்வரிசையில் நிற்கிறது,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், மூன்றாம் ஆண்டாக, 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளாக கொண்ட அயலகத் தமிழர் தின விழா, சென்னையில் நேற்று துவங்கியது.
விழாவில், 58 நாடுகளில் இருந்து, தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் நிகழ்விலும், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
அமைச்சர் உதயநிதி, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
இந்தியாவில் உள்ள மாநில கட்சிகளில், அயலகத் தமிழர்களுக்காக, தி.மு.க., தான் தனி அணியை துவக்கி உள்ளது. நாட்டிற்கு பல வழிகளில் வழிகாட்டி வரும் தமிழக அரசு, 2021ல் அயலகத் தமிழர் துறையை உருவாக்கியது.
உலகில் வாழும் அனைத்து தமிழருக்கும் உழைத்தவர் கருணாநிதி.
உலகில், 135 நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். விளையாட்டு வீரர்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், தமிழர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்; அதற்கு நன்றி.
முன்பெல்லாம் வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில், 'டிராவல் ஏஜன்ட்'கள் ஏமாற்றி வந்தனர். இந்த நிலை இன்றைக்கு பெருமளவில் மாறி உள்ளது.
சட்டப்பூர்வமாக வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதுடன், பணிக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனை காப்பதில், அயலகத் தமிழர் நலத்துறை முன்வரிசையில் நிற்கிறது.
நிறுவனங்களால் பாதிப்பு ஏற்பட்டாலும், அயலக தமிழர் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தால், பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, உதவிகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

