கழிவுநீர் லாரிகளில் ஜி.பி.எஸ்.,; நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
கழிவுநீர் லாரிகளில் ஜி.பி.எஸ்.,; நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
ADDED : நவ 13, 2024 04:20 AM
சென்னை, 'கழிவுநீர் லாரிகளில், ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் இருக்க வேண்டும். அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், அவற்றை கண்காணிக்க வேண்டும்' என, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, அரசு மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கருவி வாயிலாக, நீர்நிலைகளில் கழிவுநீர் விடுவது தடுக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாயிலாக, போலீசில் புகார் அளித்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
அதேநேரம், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளில், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படாத நிலை உள்ளது.
இதனால், கிராம பகுதிகளில் உள்ள, நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளி இடங்களில், கழிவுநீரை திறந்து விடும் அவலங்கள் நடக்கின்றன.
இதைத் தடுக்க, தமிழகம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகளில், ஜி.பி.எஸ்., என்ற செல்லுமிடத்தை கண்டறியும் கருவி கட்டாயம் அமைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் கூறியதாவது:
நீர்நிலைகள், திறந்தவெளி இடங்களில் கழிவுநீர் விடுவதை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து கழிவுநீர் லாரிகளிலும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.