ஜி.பி.எஸ்., நோய் பாதிப்பு சென்னையில் ஒருவர் அனுமதி
ஜி.பி.எஸ்., நோய் பாதிப்பு சென்னையில் ஒருவர் அனுமதி
ADDED : ஜன 29, 2025 01:08 AM
சென்னை:மும்பையில் இருந்து சென்னை வந்த நபர், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜி.பி.எஸ்., பாதிப்புடன், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், ஜி.பி.எஸ்., எனப்படும், 'கிலன் பா சிண்ட்ரோம்' பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
இதுவரை, 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நரம்பு மண்டலத்தை முடக்கும் உயிர்க்கொல்லியான, ஜி.பி.எஸ்., பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளார். இந்நோய் ஏற்பட, 'கேம்பிலோ பாக்டர் ஜெஜூனி' என்ற பாக்டீரியாவே காரணம்.
சுகாதாரமற்ற உணவு, குடிநீர், மருந்துகள் போன்றவற்றில், இந்த பாக்டீரியா இருக்க வாய்ப்புள்ளது. இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, வாந்தி, பேதி என, லேசான பாதிப்பு ஏற்பட்டாலும், சிலருக்கு நரம்பியல் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளை உருவாக்கி, உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், மும்பையில் இருந்து சமீபத்தில் சென்னை வந்த நபர், ஜி.பி.எஸ்., நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் துறை நிபுணர் விஜய் சங்கர் கூறியதாவது:
ஜி.பி.எஸ்., நோயால் பாதிக்கப்பட்ட நபர் நலமுடன் உள்ளார். இந்நோய் பல்வேறு வகையிலும், பாதிப்பை ஏற்படுத்தும். அதேநேரம், பாதிக்கப்பட்ட நபர் புனே சென்று வந்தாரா என்று விசாரிக்கப்பட்டது. புனேக்கு அவர் செல்லவில்லை.
அவர் சாப்பிட்ட உணவு, தண்ணீர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்நோய் ஏற்கனவே நம்மிடம் இருப்பதுதான். புதிய வகை பாதிப்பில்லை. இதனால், யாரும் பதற்றப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், ''தமிழகத்தில், புனேயை போல ஒரே இடத்தில், ஜி.பி.எஸ்., நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமில்லை. ஆங்காங்கே ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அவையும் அச்சப்படும் அளவுக்கு இல்லை. உரிய சிகிச்சை பெற்றால் குணமாகக்கூடியது,'' என்றார்.

