ADDED : மே 15, 2025 02:14 AM
சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,155 முதன்மை, 397 குறு மையம் என 1,552 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இம்மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்டு 29 அங்கன்வாடி உதவியாளர், பிளஸ் 2 தேர்ச்சியை தகுதியாக கொண்டு நான்கு பணியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 23 வரை வரவேற்கப்பட்டன.
பள்ளி சத்துணவு மையங்களில் 1,016 சமையல் உதவியாளர் காலிபணியிடங்கள் உள்ளன. இவற்றில், 427 சமையல் உதவியாளர் பணியை நிரப்ப பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மாவட்ட அளவில் 2,798 பேர் வரை விண்ணப்பித்த நிலையில் தற்போது விண்ணப்பங்களை சரிபார்த்து வருகின்றனர்.
அங்கன்வாடி, பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஒட்டு மொத்தமாக 5,298 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வை தகுதியாக கொண்டு தான் அங்கன்வாடி, சத்துணவு மைய பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
ஆனால் இந்த பணிக்கு பி.இ., மற்றும் எம்.பில்., முடித்த பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் சத்துணவு, அங்கன்வாடி சமையல் உதவியாளர் பணிக்கு மாவட்ட அளவில் புரோக்கர்கள், அரசியல் கட்சியினர் ரூ.3 முதல் 8 லட்சம் வரை வசூலில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.