அனைத்து ஊராட்சிகளிலும் அக்., 2ல் கிராம சபை கூட்டம்
அனைத்து ஊராட்சிகளிலும் அக்., 2ல் கிராம சபை கூட்டம்
ADDED : செப் 27, 2024 11:16 PM
சென்னை:'அடுத்த மாதம், 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில், 2025 - 26ம் நிதியாண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரிக்க வேண்டும்' என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி, அக்., 2ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கிராம சபை கூட்டத்தை, ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை, கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மதச்சார்புள்ள வளாகத்தில், கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது.
கூட்டத்தில், ஊராட்சி பொது நிதி செலவின அறிக்கையை படித்து காண்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். வரும் 2025 - 26ம் நிதியாண்டுக்கு தேவையான பணிகள், வசதிகள் போன்றவற்றை தொகுத்து, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும்.
வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் இடம் பெற வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டடங்கள் அனைத்திலும், குழாய் இணைப்புகள் வழியாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.