ADDED : ஆக 21, 2024 04:43 AM
திண்டிவனம், : திண்டிவனத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்த கருவேல மரங்கள் சில மாதங்களுக்கு முன் ஏலம் விடப்பட்டது.
அதிக மதிப்புள்ள கருவேல மரங்கள் குறைந்த விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏலத்தை முறைப்படி அனைவருக்கும் தெரிவிக்காமல் விட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் ஏலத்தை எடுத்தவர் மரங்களை அதிக அளவில் வெட்டி விட்டார்.
இதனை கண்டித்து சின்ன நெற்குணத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திண்டிவனம் பொதுப்பணித்துறை (நீர்வளத் துறை) அலுவலகம் எதிரே நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏலம் விட்டதை நிறுத்த வேண்டும். மீண்டும் ஏலம் விட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின், 3:00 மணியளவில் அவர்களாகவே கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்ராமனிடம் கேட்ட போது, 'கலெக்டர் உத்தரவின் பேரில் ஏரியிலிருந்த கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏலம் விட்ட சமயத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தால், ஏலத்தை நிறுத்தியிருப்போம்' என தெரிவித்தார்.

