மூதாட்டி கொலை வழக்கில் 6 ஆண்டுக்கு பின் பேரன் கைது
மூதாட்டி கொலை வழக்கில் 6 ஆண்டுக்கு பின் பேரன் கைது
ADDED : ஏப் 04, 2025 02:37 AM
கலசப்பாக்கம்,:மூதாட்டி கொலையில், 6 ஆண்டுகளுக்கு பின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர், 65 வயது மூதாட்டி. இவர், 2019ல் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் வைத்திருந்த, 15,000 ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
கலசப்பாக்கம் போலீசார், கொலையாளியை தேடி வந்தனர். ஆனால், துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறினர். மூதாட்டியின் உறவினர்களை கண்காணித்து வந்தனர்.
இதில், பக்கத்து கிராமமான கல்லறைபாடியை சேர்ந்த மகள் வழி பேரன் செல்வராஜ், 32, மூதாட்டி இறந்த பிறகு, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அவர், மீண்டும் ஊருக்கு வரவில்லை.
போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தும் வரவில்லை. சந்தேகமடைந்த போலீசார் நேற்று முன்தினம் கும்மிடிபூண்டி சென்று விசாரணை நடத்தியதில், மூதாட்டியை, செல்வராஜ் கொலை செய்தது உறுதியானது. அவரை கைது செய்தனர்.

