மாவட்ட தலைநகரங்களில் கல்லறைகள், கபர்ஸ்தான் மைனாரிட்டி சமூகத்தினருக்கு சலுகைகள் அறிவித்தார் ஸ்டாலின்
மாவட்ட தலைநகரங்களில் கல்லறைகள், கபர்ஸ்தான் மைனாரிட்டி சமூகத்தினருக்கு சலுகைகள் அறிவித்தார் ஸ்டாலின்
ADDED : ஜன 09, 2024 11:23 PM

சென்னை:'கிறிஸ்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு, அரசு நிதியுதவி வழங்குவதற்கு, திருத்தி அமைக்கப்பட்ட வழிமுறைகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்' என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் விபரம்:
உபதேசியர்கள் நல வாரியத்தில், உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுதிக்குள் துவக்கப்படும்
கல்வி நிறுவனங்களுக்கு, சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெற, இணைய வழியில் விண்ணப்பிக்க, புதிய இணையதளம் இந்த மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும்
கிறிஸ்துவர்கள், ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு, அரசு நிதியுதவி வழங்க, திருத்தி அமைக்கப்பட்ட வழிமுறைகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்
கிறிஸ்துவ கல்லறைகளில், மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு, தற்போதுள்ள விதிகளை தளர்த்தி, சவப்பெட்டி இல்லாமல் புதைக்கப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்கு பின், வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி அளிக்கப்படும்.
உலோகத்தால் செய்யப் பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டு களுக்கு பின், அதே குடும்பத்தை சேர்ந்த, வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதி அளிக்கப்படும்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, கிறிஸ்துவ கல்லறையில் இருப்பதைப் போன்று, உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இதற்கான ஆணைகள், இந்த வார இறுதிக்குள்வெளியிடப்படும்
இந்த புதிய விதி, தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் உள்ள, கிறிஸ்துவ கல்லறைகளுக்கு பொருந்தும்
கிறிஸ்துவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத மாவட்ட தலைநகரங்களில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
வழிபாட்டு தலங்களுக்கு முறையான அனுமதி பெறுவதிலும், வழிபாட்டு தலங்களில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலும், பல இடர்பாடுகளை களைந்து, ஒரு நிலையான இயக்க நடைமுறை வெளியிடப்படும்
அரசு சாரா நிறுவனங்களுக்கான மானியத்தொகையை தடையின்றி விரைந்து வழங்க, உரிய இணைய வழி முகப்பு உருவாக்கப்படும்
இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்து, தேவையான அனைத்து சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டதும், குறுகிய காலத்திற்குள் உரிமம் வழங்கப்படும்
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், வானவில் மன்றம், தேன் சிட்டு மலர், கலைத் திருவிழா போன்ற திட்டங்கள், படிப்படியாக செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழியில் படித்த மாணவியர், புதுமைப் பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து, பட்ஜெட்டில் நல்ல செய்தி வரும்
கிராமங்களில் உள்ள, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து, வரும் பட்ஜெட்டில் சாதகமாக பரிசீலிக்கப்படும்
சிறுபான்மையினர் பள்ளி பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கு தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும்
பள்ளிக் கல்வித் துறையில், அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 53, இதரப் பிரிவினருக்கு 58 என நிர்ணயித்து, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதை அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
சிறுபான்மையினரின் கல்லுாரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி., மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலை மற்றும் அரசால், மூன்று மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் வழங்கப்படும்
மாநில அரசால், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும், மதச் சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ், தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இனி நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்
சமூக நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகியவற்றின் கீழ், உதவி பெறும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்தல், உரிமங்களை புதுப்பித்தல், நிதியுதவி மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
இதற்கென பிரத்யேகமாக, ஒரு இணையதளம் உருவாக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

