ADDED : ஏப் 29, 2026 01:58 AM
சென்னை:தமிழக மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கேழ்வரகு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு, ராணுவ வீரர்களுக்கான உணவில், சிறுதானிய வகைகளை சேர்த்துள்ளது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின் சார்பில், கேழ்வரகு கொள்முதல் செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது.
கடந்த, 2024 - 25 சீசனில், 3,950 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு கொள்முதல் சீசன், 2025 நவ., முதல் துவங்கி, இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்தது.
பின், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப் பட்டது.
விவசாயிகளுக்கு டன் கேழ்வரகுக்கு, 48,860 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுகிறது.
நடப்பு சீசனில், 6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இம்மாதம், 24ம் தேதி வரை, 2,005 விவசாயிகளிடம், 4,282 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப் பட்டுள்ளது.
