மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள்; 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம்!
மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள்; 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம்!
ADDED : டிச 19, 2024 02:22 PM

சென்னை: 'திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இது குறித்து இன்று (டிச.,19) பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:
* திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும்.
* கேரளாவுக்கு கொண்டு செல்லாவிட்டால் குப்பை மேலாண்மை நிறுவனத்திடம் கேரளா அரசே ஒப்படைக்க வேண்டும்.
* கழிவுகளை கேரளா கொண்டு செல்லலாம் அல்லது திருநெல்வேலி நிறுவனத்திடம் வழங்கலாம்.
* திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு கேரளாவே பொறுப்பேற்க வேண்டும்.
* கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.