குரூப் - 2, 2ஏ தேர்வு கடினம் 25 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
குரூப் - 2, 2ஏ தேர்வு கடினம் 25 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
UPDATED : செப் 29, 2025 11:02 AM
ADDED : செப் 29, 2025 01:25 AM

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, 'குரூப் - 2, 2ஏ' முதல்நிலை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், 25 சதவீதம் பேர் வரவில்லை. தேர்வு எழுதியவர்களும் வினாக்கள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 2, 2ஏ' போட்டித்தேர்வு அறிவிப்பு, ஜூலை, 15ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு, 5 லட்சத்து 53,634 பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுதும் 1,905 மையங்களில், நேற்று காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை முதல்நிலை தேர்வு நடந்தது.
விண்ணப்பித்த பட்டதாரிகளில், 4 லட்சத்து 18,791 பேர் தேர்வெழுதினர். இது, 75.64 சதவீதம். ஒரு லட்சத்து 34,843 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு சற்று கடினமாக இருந்தது என, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பிரபாகர், சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள பள்ளியில் ஆய்வு செய்த பின் அளித்த பேட்டி:
டி.என்.பி.எஸ்.சி., கேள்வித்தாள் பல கட்டங்களாக தயாரிக்கப்படுகிறது. ரகசியம் கருதி ஒரே கட்டமாக தயாரிக்கப்படுவதில்லை. வினாத்தாள்களின் மொழிப்பெயர்ப்பு, வினாக்கள் பாடத்திட்டத்தில் உள்ளதா என்பது குறித்து, நிபுணர் குழு ஆய்வு செய்கிறது. சில நேரங்களில், அச்சு பிழை, சில இனங்களில் மொழி பெயர்ப்பு பிழை வந்து கொண்டு தான் இருக்கிறது.
இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. முடிந்தவரை அந்த தவறுகள் இல்லாமல், கேள்வித்தாள்கள் தயாரிக்க நிபுணர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை, அந்த பணியில் இருந்து மாற்றி உள்ளோம். ஆனாலும், சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாகிறது. தவறான கேள்விகள் வந்தால், மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, நிபுணர்கள் குழு ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறது.
குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். 2026ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பருக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.