ADDED : நவ 03, 2024 02:53 AM

சென்னை:மின்சாதனம் இடமாற்றம் உள்ளிட்ட, 25 சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது விண்ணப்ப கட்டணம், வளர்ச்சி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய, ஒருமுறை செலுத்தக்கூடிய பல்வகை கட்டணம் வசூலிக்கிறது.
பின், மின் பயன்பாட்டுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறையும் கட்டணம் வசூலிக்கிறது. மின் சாதனம் இடமாற்றம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., கிடையாது.
அதேசமயம், மின்சார சேவைகளுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது. அதன்படி, தமிழக மின் வாரியமும், பல சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலித்து வந்தது.
தற்போது, ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரையை ஏற்று, விண்ணப்ப கட்டணம், மின் சாதனம் இடமாற்றம், மீட்டர் வாடகை, எரிந்த மீட்டரை மாற்றுவது, மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டண விகிதம் மாற்றம் உள்ளிட்ட, 25 சேவைகளுக்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவு, கடந்த மாதம் 10ம் தேதி முதல், முன்கூட்டியே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.