ADDED : அக் 11, 2025 01:26 AM
பீஹாரில் கங்கை மற்றும் காக்ரா நதிகள் சங்கமிக்கும், சீதாப்தியாரா கிராமத்தில், 1902 அக்டோபர், 11ல் ஜனநாயக காவலரான, லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தார். அவரது, 123-வது பிறந்த நாளை இந்த ஆண்டு நாம் கொண்டாடுகிறோம். ஜே.பி., என்று அன்புடன் நினைவு கூரப்படும் அவர், ஒரு போதும் தன்னைப் பற்றி சிந்திக்காதவர்.
நாட்டின் ஏழை, எளிய மக்களை, தன் முன்னுரிமையாக எப்போதும் கொண்டிருந்தவர். லோக் நாயக் என்ற பட்டம், அவரது மகத்தான ஆளுமைக்காக அளிக்கப்பட்டதல்ல.
மாறாக, 1974 ஜூன், 5ல், பாட்னாவின் காந்தி மைதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பால், அவருக்கு அந்தப் பட்டம் வழங்கப்பட்டது.
மக்கள் நம்பிக்கை இந்நாளில் அவரது வாழ்க்கை மற்றும் தத்துவத்தை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரை வாயிலாக, அந்த மகத்தான தலைவருக்கு என் மரியாதையை செலுத்துகிறேன்.
சீதாப்தியாராவிலிருந்து லோக் நாயக்கின் எளிமையான தொடக்கம், அவரது வாழ்க்கை முறையில் வேரூன்றவும், ஏழைகளை சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும் உதவியது.
இன்டர்மீடியட் கல்வி பயின்ற நாட்களில், அஹிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் எழுச்சி பெற்றது.
இது, அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சுதேசியாக மாறுவதற்காக, அனைத்து சொகுசு பொருட்களையும் அவர் கைவிட்டார்.
பின், 1952-ல் சர்வோதயா தத்துவத்துடன் இணைந்த வினோபா பாவேயின் பூமி தான இயக்கம், இந்தியாவின் நிலப்பிரச்னைகளுக்கு நடைமுறை தீர்வு என்பதை கண்டறிந்தார். பொதுவாக ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும், குறிப்பாக இந்தியாவிற்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அமைதி என்ற இலக்குகளை அடைவதற்கு, அவர் தொடர்ந்து பாடுபட்டார்.
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும், ஊழல் நிலவுவதை லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் கவனித்த போது, இந்திய சமூகத்தை சீரமைக்கவும், மறுகட்டுமானம் செய்யவும், தேசத்தின் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
ஜனநாயக அமைப்புகளின் மீது, மக்கள் நம்பிக்கை இழந்த போது, இந்த இயக்கத்தின் மூலம் ஜனநாயக சக்தி மீது மக்களின் நம்பிக்கையை அவர் மீட்டெடுத்தார்.
சமூக விழிப்புணர்வு ஊழலுக்கு எதிரான அவரது இடைவிடாத முழக்கம், அந்த நாட்களில் அரசியலில் நிலையான இடத்தை பெற்றது. இது, ஜனநாயகத்தில் மக்கள் சக்தி நிறுவப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.
நான், 19 வயது இளைஞனாக இருந்த போது, சம்பூர்ண கிராந்தி இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ய, கோயம்புத்துார் மாவட்ட அமைப்பு செயலாளராக இருந்தது, எனக்கு மகத்தான கவுரவமும், பெருமையுமாகும்.
இந்திய வரலாற்றின் மிக முக்கியமான காலத்தில், நான் கற்றுக்கொண்டவை ஒரு இளைஞன் என்பதில் இருந்து, நம்பிக்கையுள்ள சமூக விழிப்புணர்வு கொண்ட தலைவராக என்னை உருமாற்றம் செய்தன.
இந்த இயக்கம் தலைமைத்துவத்திற்கு முக்கியமான பக்குவம், நெறிமுறை சார்ந்த முடிவு, சமூக உணர்வு போன்றவற்றை எனக்குள் வளர்த்தது.
மாற்றத்தைக் கொண்டு வருவது மக்கள் சக்தி என்பதற்கு, லோக் நாயக் ஜெயபிரகாஷின் வாழ்க்கையும், போதனைகளும் சான்றுகள். வெல்ல முடியாத சவால்கள் தோன்றினாலும், அவை ஒரு பொருட்டல்ல.
ஜன நாயக மாண்புகளை பாதுகாப்பது, சமத்துவம், நீதி, அமைதி ஆகியவற்றை கொண்ட சமூகத்தை நோக்கி பணியாற்றுவது என்பதற்கு, அவரது போதனைகள் முக்கிய இடம் தருகின்றன.
பாரத ரத்னா ஜெயப்பிரகாஷ் நாராயணின் போதனைகள் தொடர்ந்து அரசியல்வாதிகளை மட்டும் ஈர்க்கவில்லை, ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்ற சிந்தனைகளில் நம்பிக்கையுள்ள, இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவரையும் ஈர்த்தது.
தேசக்கட்டுமானத்திற்கு அவர் செய்த அனைத்து பங்களிப்புகளுக்காக, பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது. அந்த மகத்தான மனிதருக்கு இதுவும் கூட சிறிய பங்களிப்பு என்று நான் கருதுகிறேன். உண்மையில் அவர் பாரதத்தின் ரத்தினமாக திகழ்ந்தார்.
-சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி