கைதிகளுக்கு தின்பண்டம் எடுத்து செல்லும் காவலர்கள் 'சஸ்பெண்ட்': கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை
கைதிகளுக்கு தின்பண்டம் எடுத்து செல்லும் காவலர்கள் 'சஸ்பெண்ட்': கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை
ADDED : நவ 22, 2024 11:52 PM

சென்னை: 'சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தின்பண்டங்கள், 'சப்ளை' செய்யும் காவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் எச்சரித்துஉள்ளார்.
தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. இவற்றில், 24,342 கைதிகளை அடைக்க முடியும்.
தற்போதுள்ள கைதிகளை விசாரணைக்கு ஆஜர்படுத்த, நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்களுக்கு வழிக்காவல் போலீசார் உணவு உள்ளிட்ட பொருட்கள் வாங்கித் தருகின்றனர். உறவினர்களிடம் பேசவும் வைக்கின்றனர்.
இதுபோன்ற உதவிகளுக்கு, கைதிகளின் உறவினர்கள் வாயிலாக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது, சிறைக்கைதிகளுக்கு காவலர்களே, கடலை மிட்டாய் போன்ற சிறிய வகையிலான தின்பண்டங்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.
தின்பண்டங்கள் என்ற பெயரில்கஞ்சா சாக்லெட் என, போதை வஸ்துக்கள் கடத்தப்படலாம் என்பதால், மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே, காவலர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து,சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தவறு செய்யும் காவலர்கள் மற்றும் கைதிகளிடம், மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்காணிக்க, நுண்ணறிவுப் பிரிவு செயல்படுகிறது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கைதிகளுக்கு காவலர்களே தின்பண்டங்கள் எடுத்துச் செல்வது தெரிய வந்திருப்பதால், அதுபோன்ற செயலில் ஈடுபடுவோர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் எச்சரித்துள்ளார்.
அதற்காக சிறைகளில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.