சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ வழிகாட்டுதல்
சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவ வழிகாட்டுதல்
ADDED : ஜூலை 23, 2025 02:56 AM
சென்னை:சமூக வலைதளங்கள், இணையதளங்களில் பரவி வரும், தனது வீடியோக்களை நீக்க, நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ஆஜராகி, ''பெண் வழக்கறிஞரின் வீடியோ, புகைப்படங்கள், இன்று வரை ஆறு இணையதளங்களில் இடம்பெற்று உள்ளன,'' என தெரிவித்து, அந்த இணையதளங்களின் 'லிங்க்' விபரங்களை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.குமரகுரு ஆஜராகி, ''சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து, டேட்டாவை பாதுகாக்க, ஒவ்வொரு நகரமும், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தி, மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
''நீதிமன்ற உத்தரவின்படி, உள்துறை அமைச்சகமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் இணைந்து, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்கள், தங்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்ற, சம்பந்தப்பட்டவர்களை எளிதாக அணுக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருகிறது. அவற்றை தாக்கல் செய்ய, அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.
காவல்துறை தரப்பில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்குகள் மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகளிலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து, வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய, அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்கள், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட, வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டு விட்டது,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதி, ''இணையதளங்களில் இடம்பெற்றுள்ள வீடியோ, புகைப்படங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதோடு, அது தொடர்ந்து இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,'' எனக் கூறி, மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தாக்கல் செய்ய, அவகாசம் வழங்கி, ஆக., 5ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.