குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு
குளச்சல் அருகே கரை ஒதுங்கிய கன்டெய்னரை குஜராத் குழு ஆய்வு
ADDED : மே 31, 2025 12:29 AM

நாகர்கோவில் : கேரள கடற்பகுதியில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய கன்டெய்னர் மற்றும் கழிவுப்பொருட்களை குஜராத்தில் இருந்து வந்த சிறப்புக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து மே 24 ல் கொச்சித்துறைமுகத்திற்கு புறப்பட்ட சரக்கு கப்பல் 640 கண்டெய்னர்களுடன் ஆழ்கடலில் மூழ்கியது. இதில் சில கன்டெய்னர்களும் கழிவுப்பொருட்களும் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிக்கு வந்தன.
கொல்லங்கோடு அருகே இரவி புத்தன்துறை, பூத்துறை, இனையம், சின்னத்துறை கடற்கரை பகுதிகளில் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கியது. குளச்சல் அருகே வாணியக்குடி கடலில் ஒரு கன்டெய்னர் கரை ஒதுங்கியது.
இந்த பொருட்களின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது.
இவற்றை ஆய்வு செய்ய குஜராத்தில் இருந்து எட்டு பேர் கொண்ட சிறப்பு குழுவினர் நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்கள் வாணியக்குடியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கரை ஒதுங்கிய கழிவுப்பொருட்கள், கண்டெய்னர்களை அகற்ற முழுவீச்சில் பணிகள் நடப்பதாக கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.