ADDED : ஆக 20, 2026 01:33 AM

- நமது சிறப்பு நிருபர் -: தமிழகத்தின் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவின் கூடூர் இடையே மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, 2,229 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது.
இதில், 13,041 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே மற்றும் நெடுஞ் சாலை திட்டங்களை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 9,450 கோடி ரூபாய் மதிப்பில் தமிழகம், ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களில் 410 கி.மீ., தொலைவுக்கு கூடுதலாக ரயில் பாதைகள் அமைக்கப்படஉள்ளன.
இதன் மூலம் 6,448 கிராமங்களில் வசிக்கும் 60 லட்சம் மக்களுக்கு ரயில் இணைப்பு மேம்படும்.
இதில், சென்னையின் புறநகர் பகுதியான கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆந்திராவின் கூடூர் ரயில்வே ஸ்டேஷன் வரை மூன்று மற்றும் நான்காவது ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் 2,229 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - தமிழகத்தின் சென்னை வரையிலான வழித்தடம் முழுதும் நான்கு ரயில் பாதைகள் கொண்டதாக மாற்றப்படும். இதன் மூலம், இந்த வழித்தடத்தில் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும்.
நிலக்கரி, இரும்பு தாது, சிமென்ட், எக்கு, சரக்கு பெட்டகங்கள், வாகனங்கள், உணவு தானியங்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தும் அதிகரிக்கும்.
ரயில் போக்குவரத்து அதிகரிப்பதால், ஆண்டுக்கு தோராயமாக 13 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். 65 கோடி கிலோ கரியமில வாயு வெளியேற்றம் குறையும். இது, 2.60 கோடி மரங்களை நடுவதற்கு சமமான சுற்றுச்சூழல் பலனை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
