ADDED : ஜூன் 21, 2025 07:31 PM
நாமக்கல்:தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், 56 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
நாமக்கல் அடுத்த கீரம்பூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தை, தமிழ்நாடு சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார்.
அப்போது, நாமக்கலில் குடிமைப்பொருள் வழங்கல் துறையைச் சேர்ந்த கூட்டுறவு சார் -பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, ரேஷன் கடைகளில் தொடர் சோதனை மேற்கொள்ளவும், கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால், ஒன்றிணைந்து தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மண்டலம் வாரியாக, நான்கு குழுக்களாக பிரிந்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது, நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், கடந்த ஐந்து மாதங்களில், 56 பேர் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும், 1.06 கோடி ரூபாய் மதிப்பில், 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, 5,120 வழக்குகள் பதிந்து, 4,608 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 434 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட, 1,099 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

