'குட்கா' வழக்கு ஆவணங்களை காகித வடிவில் வழங்க முடியாது
'குட்கா' வழக்கு ஆவணங்களை காகித வடிவில் வழங்க முடியாது
ADDED : நவ 07, 2024 02:27 AM
சென்னை:'குட்கா முறைகேடு வழக்கு ஆவணங்களை காகித வடிவில் வழங்க கோரி, முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., வலியுறுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என, 27 பேருக்கு எதிராக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கில், 19வது நபராக குற்றம்சாட்டப்பட்ட முருகன் என்பவர், கடந்த ஜூனில் இறந்து விட்டார். மீதமுள்ள 26 பேர் மீதான வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில், கடந்த செப்., 9ல் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆஜராகினர்.
அப்போது, 'வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மின்னணு முறையில் வழங்காமல், காகித வடிவில் வழங்க வேண்டும்' என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றப்பத்திரிகை, சாட்சிகள் பட்டியல், சான்று ஆவணங்களின் பட்டியல் ஆகியவை மட்டுமே காகித வடிவில் வழங்கப்படும். மற்ற ஆவணங்கள், 'பென்டிரைவ்' எனும் மின்னணு சாதனம் வாயிலாக வழங்கப்படும்.
வழக்கில் 26 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், வழக்கு ஆவணங்கள் அதிகமாக உள்ளதால், மின்னணு வடிவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காகித வடிவில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தை கொண்டது.
புதிய சட்டப்படி, காகித வடிவில் ஆவணங்களை வழங்க வேண்டும் என உரிமையாக கோர முடியாது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க, டிச., 20க்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி, நேற்றைய விசாரணையில் ஆஜராகாத ராஜேந்திரன் என்பவருக்கு, 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார்.