ரூட்டை மாற்றும் குட்கா, புகையிலை விற்பனையாளர்கள் வீடுகள், டூவீலர்களுக்கு ‛ஷிப்ட் ஆகி சப்ளை
ரூட்டை மாற்றும் குட்கா, புகையிலை விற்பனையாளர்கள் வீடுகள், டூவீலர்களுக்கு ‛ஷிப்ட் ஆகி சப்ளை
ADDED : அக் 09, 2024 05:21 AM

மதுரை : தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகளை சீல் வைத்தும் அபராதம் விதித்தும் போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறையினரின் நடவடிக்கை தொடர்வதால் கடைக்காரர்கள் ரூட்டை மாற்றி வீடுகளிலும் டூவீலர்களிலும் விற்பனையைத் தொடர்கின்றனர்.
கடந்தாண்டு நவம்பரில் இருந்து போலீசார், உணவுப்பாதுகாப்புத்துறையினர் அந்தந்த மாவட்டங்களில் குழுக்களாக பிரிந்து பெட்டிக்கடைகளை சோதனையிட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான கடைகளில் தொடர் ஆய்வும் நடந்தது. முதல்முறை பிடிபடும் கடைக்காரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 15 நாட்கள் கடைக்கு சீல் வைக்கப்படும்.
2ம் முறை பிடிபட்டால் 30 நாட்கள் கடை மூடப்பட்டு ரூ.50ஆயிரம் அபராதம், 3ம் முறை பிடிபட்டால் 3 மாதம் கடை மூடப்பட்டு ரூ.ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பர் முதல் இந்தாண்டு செப்டம்பர் வரை 19ஆயிரத்து 822 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அபராதத்தொகையாக ரூ.37 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 890 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர் ரெய்டு, கடையடைப்பு, அபராதம் என கடைக்காரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் புகையிலை பொருட்கள் விற்பதை சிலர் நிறுத்தவில்லை. வீடுகளிலும், டூவீலர்களிலும் விற்பனையைத் தொடர்கின்றனர்.
மதுரையில் வீடு, டூவீலர்களில் விற்பனை செய்வோரையும் போலீசாருடன் இணைந்து பிடித்துள்ளோம் என்கிறார் உணவுப்பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன். அவர் கூறியதாவது: 11 மாதங்களில் 24ஆயிரத்து 175 கடைகளை ஆய்வு செய்து 758 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.ஒரு கோடியே 19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3011 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததில் 'கூல் லிப்' புகையிலை மட்டும் 401 கிலோ. இது பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது.
டீத்துாள் பை போன்று இந்த 'கூல் லிப்' புகையிலையை மாணவர்கள் உதட்டுக்குள்ளே வைத்து சுவைப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயமுள்ளது. கடைக்காரர்களின் உறவினர்கள் மூலம் வீடுகளில் பாத்திரங்களில் வைத்து 'கூல் லிப்' விற்கின்றனர். குறிப்பிட்ட இடங்களில் டூவீலர்களில் நின்று சப்ளை செய்கின்றனர். ரூ.20க்கு கடைகளில் விற்கப்பட்ட இந்த புகையிலையை ரூ.120க்கு விற்பதால் விற்பவர்களுக்கு பல மடங்கு லாபம். பள்ளி மாணவர்களுக்கு இந்த தொகை பெரியது என்பதால் வாங்குவதற்காக தவறான வழியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
டூவீலர்களிலோ, வீடுகளிலோ, ஆள் அரவமற்ற ரோட்டிலோ 'கூல் லிப்', புகையிலை விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
வாட்ஸ்அப்பில் 94440 42322ல் புகார் செய்யலாம்.
ரூ.20க்கு கடைகளில் விற்கப்பட்ட இந்த புகையிலையை ரூ.120க்கு விற்பதால் விற்பவர்களுக்கு பல மடங்கு லாபம். பள்ளி மாணவர்களுக்கு இந்த தொகை பெரியது என்பதால் வாங்குவதற்காக தவறான வழியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.