ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: இருவரும் செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு
ADDED : ஏப் 04, 2025 05:17 PM

சென்னை: விவாகரத்து வழக்கில் இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். கடந்த 2013ம் ஆண்டு, தன் பள்ளி தோழியும், பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு முன்னும், பின்னரும், இருவரும் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளனர்.
கடந்த, 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தினர் இடையே எழுந்த பிரச்னையால், சமீப நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டது. கடந்தாண்டு சமூக வலைதளத்தில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், தாங்கள் பரஸ்பரம் பிரிவதாக பதிவிட்டனர்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த மனு, சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.செல்வசுந்தரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி நேரில் ஆஜராகினர். தாங்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக, நீதிபதியிடம் தெரிவித்தனர்.அதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல்04) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசையப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி இருவரும் செப்.25ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

