டிச.,17ல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்
டிச.,17ல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்
ADDED : அக் 25, 2024 04:00 AM

சென்னை: அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,17 ம் தேதி, அரை நிர்வாண போராட்டம் நடத்துவது என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
அரசு ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், சங்கத்தின் மாநில தலைவர் டி.கதிரேசன் தலைமையில், சென்னை வில்லிவாக்கத்தில், நேற்று(அக்.,24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 130 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர்.
போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 106 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை, நீதிமன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, 23 மாதங்களாக பண பலன் வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும். 2003, ஏப்.1ம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, சென்னையில் வரும் டிசம்பர் 17ம் தேதி, 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டு, அரை நிர்வாண போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.