அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி டிச.,9ல் துவக்கம்
அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி டிச.,9ல் துவக்கம்
ADDED : டிச 05, 2024 03:10 AM
சென்னை : ''திட்டமிட்டப்படி வரும் 9ம் தேதி அரையாண்டு தேர்வுகள் துவங்கும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும் டிச., 2ம் தேதி செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், செய்முறைத் தேர்வுகள் நடத்த இயலாத சூழல் இருந்தால், ஜன., முதல் வாரத்தில் நடத்தும்படி கூறியுள்ளோம்.
மழையால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில், பள்ளிகளில் மழை பாதிப்பு உள்ளதா, பள்ளிகளில் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா, மின் பிரச்னை உள்ளதா என்பது குறித்த விபரங்களை கேட்டுஉள்ளோம்.
பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கும் தகவல்கள் அடிப்படையில், தேர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வரும் 9ம் தேதிக்குள் பாதிப்புகள் சரி செய்யப்பட்டனவா என, தலைமை ஆசிரியர் வாயிலாக உறுதி செய்யப்படும்.
தேர்வுகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு, ஒன்று அல்லது இரண்டு தேர்வுகள் நடத்த இயலாத நிலை ஏற்பட்டால், விடுபட்ட தேர்வுகள் ஜன., முதல் வாரத்தில் நடத்தப்படும்.
அரையாண்டு தேர்வுகள் வரும் 9ம் தேதி துவங்குவதில் மாற்றம் இல்லை. எங்கெல்லாம் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதோ, அங்கு மட்டும் ஜன., மாதம் தேர்வு நடத்தப்படும்.
தலைமை ஆசிரியர் நியமனம் குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்தால், 2,500 பேருக்கு பணி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.