UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:27 AM

வி ருதுநகரில் தேங்காய் சிரட்டையில் கைவினை, வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து சுயதொழில் செய்து வருவாய் ஈட்டி வருகிறார் ஒரு குடும்பத் தலைவி.
கொரோனாவுக்கு பின் மக்கள் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக நலம் தரும் மூலிகை சூப்கள், செம்பு குடிநீர் பாட்டில்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் மக்கள் பின்பற்ற துவங்கி உள்ளனர்.
அந்த வகையில் வீட்டில் குழம்பு வைக்க உடைக்கும் தேங்காய்களின் சிரட்டை ஓடுகளை வெறுமனே குவிந்து கிடக்க விடாமல் ஏதாவது பொருட்கள் செய்யலாமே என யோசித்த விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த மங்கையர்க்கரசி, பொழுதுபோக்காக துவங்கி, தற்போது சுய தொழிலாக செய்கிறார்.
நாகர்கோவில் மாவட்டம் கோட்டார் தேங்காயின் சிரட்டை அளவில் பெரியதாக இருக்கும். பொள்ளாச்சி தேங்காய்களை விட பெரியது. இது விருதுநகரிலே கிடைப்பதால், வீட்டிற்கு சமைக்க வாங்கும் தேங்காய் பயன்படுத்திய பின், அதன் சிரட்டை ஓடுகளை செதுக்க துவங்கினார். இதற்காக சிறு அறுவை, தேய்ப்பு இயந்திரமும், துளையிடும் இயந்திரமும் வாங்கினார். ஒவ்வொரு தயாரிப்பை பொருத்து தேய்ப்பு மாறுபடும்.
வெறுமனே யூடியூப் வீடியோ பார்த்து துவக்கினார். அதன் பின் முழுமூச்சாக இறங்கி புதிய புதிய பொருட்களை உருவாக்கினார். என்ன மாதிரி வேண்டுமோ அதற்கு தகுந்தார் போல் வெட்டி ஒட்ட வேண்டும். குறிப்பாக ஜக், அலங்கார தோரணங்கள் போன்றவற்றிற்கு வேலைபாடு அதிகம் இருக்கும். இவை தவிர ஸ்பூன், கரண்டி, கப் அண்ட் சாஸர், பறவைக்கு தானியம் வைக்கும் சிற ஓடு பானை, செடி வளர்க்கும் ஓடு பானை போன்றவற்றையும் உருவாக்கி உள்ளார்.
மங்கையர்க்கரசி கூறியதாவது: சிரட்டை ஓடுகள் உடலுக்கு மிகவும் நல்லது. பழமையான பாரம்பரிய உணவை உண்ட உணர்வு தரும். டீ குடிக்கும் போது அந்த சூடு அப்படியே இருக்கும். சுவை மிகவும் அருமையாக இருக்கும். பிளாஸ்டிக் தவிர்ப்பதற்கு இது மிகவும் பயனள்ளதாக இருக்கும், என்றார்.
