ADDED : பிப் 16, 2024 01:00 AM
சென்னை:கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய, 25 மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதற்கு மூளையாக செயல்பட்ட, அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், 28, பலியானார்.
இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ஜமேஷா முபின், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவரது தலைமையில் மிகப்பெரிய கும்பல் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, கடந்த 10ம் தேதி, சென்னை, திருநெல்வேலி, மதுரை என, அரபிக் கல்லுாரிகள் உட்பட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், வீடுகள், அலுவலகங்கள் என, 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22, மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமும் சிக்கிய, மொபைல் போன்கள் உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, ஏற்கனவே, 14 பேர் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.