ராமநாதபுரம் - ராமேஸ்வரம் 4 வழிச்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் 4 வழிச்சாலை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 19, 2024 02:31 AM
சென்னை:ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையில், நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி கைமாறியது.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலை 56 கி.மீ., நீளம் கொண்டது. அதை இரு வழிச்சாலையாக அமைத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ராமேஸ்வரம் வந்து செல்கின்றனர். இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாம்பன் பாலத்தின் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து மணிக்கணக்கில் நிற்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இச்சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக நடந்து வந்தது.
தற்போது, சாலை விரிவாக்க பணி, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, பெங்களூருவை சேர்ந்த, 'பீட்பேக்' என்ற நிறுவனம் வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாலை விரிவாக்க பணிக்கு நில இழப்பீடு வழங்குவதற்கு மட்டும், 300 கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. சாலை விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, பாம்பனில் புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளது.
மொத்தமாக இந்த நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு, 700 கோடி ரூபாய் தேவைப்படலாம். விரிவான திட்ட அறிக்கைக்கு பின்னரே, இதுகுறித்த கூடுதல் விபரங்கள் தெரியவரும். திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகளை ஆறு மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீட்டை பெற்று, 2025 மே மாதம் சாலை அமைக்கும் பணி துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.