கருத்து கேட்பதிலேயே காலம் போயிருமோ? அரசு ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தி
கருத்து கேட்பதிலேயே காலம் போயிருமோ? அரசு ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தி
ADDED : ஆக 29, 2025 04:25 AM
சென்னை: மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்கு மாற்றாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் சங்கங்கள், 2003 முதல் போராடி வருகின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என, அரசு ஊழியர்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து, சிறந்த ஓய்வூதியத்தை தேர்வு செய்து நடைமுறைப் படுத்த, மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கருத்து கேட்பதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது .
இக்குழுவினர், பல்வேறு சங்க நிர்வாகிகளை அழைத்து, தலைமை செயலகத்தில் கருத்து கேட்டு வருகின்றனர். இதுவரை, மூன்று கருத்துகேட்பு கூட்டங்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் 3, 4, 11 மற்றும் 12ம் தேதி என, நான்கு கட்டங்களாக, மேலும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க, 90 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகேட்பு குழுவின் அனுமதி காலம், செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிகிறது. ஆனால், கருத்துகேட்பு கூட்டமோ, 12ம் தேதி வரை நடக்கஉள்ளது.
இதனால், திட்டமிட்டபடி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமா; சட்டபை தேர்தல் அறிவிப்புக்கு முன், பழைய ஓய்வூதிய திட்டம் வருமா என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.