UPDATED : அக் 13, 2026 10:02 PM
ADDED : அக் 13, 2026 09:59 PM
சென்னை: செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2006 -–- 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க., ஆட்சியில், உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் வாயிலாக, அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை, ஹவாலா பணப் பரிவர்த்தனை வாயிலாக, வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதாக, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக, 2023ம் ஆண்டில், சென்னை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. ‘உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூல வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதால், அமலாக்கத் துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது’ என கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
