குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சிகள் விசாரணையை தொடர வேண்டும் சி்றப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ்
குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சிகள் விசாரணையை தொடர வேண்டும் சி்றப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அட்வைஸ்
ADDED : மார் 23, 2025 01:39 AM
சென்னை: 'வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஆஜராகவில்லை என்றாலும், சாட்சிகள் விசாரணையை நடத்தலாம்' என, சிறப்பு நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியில், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இங்கு, தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க., நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
விலக்கு கோரி
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது பரூக், விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்தது.
அன்றைய தினம் ஆஜரான முகமது பரூக், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, 'பிடிவாரன்ட்' உத்தரவை திரும்ப பெறக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முகமது பரூக் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, கடந்த ஒரு மாதத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், தங்கள் மீதான வழக்கை தாமதப்படுத்தும் உத்தியாக, நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கக் கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, சிறப்பு நீதிமன்றம் தன் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளது.
ஆஜராகுவதில் இருந்து விலக்கும் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை, சிறப்பு நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
விசாரணை நீதிமன்றம், தன் அதிகாரத்தை பயன்படுத்தும் போது, இதுபோன்ற மனுக்களை பரிசீலிப்பதில் நியாயமாக இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அறிவுறுத்திஉள்ளது.
உத்தரவு ரத்து
விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதால், விலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக, சிறப்பு நீதிமன்றம் கூறியிருக்கும் காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, முகமது பரூக்கை சிறையில் அடைத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை, 'பொடா' என்ற பயங்கரவாத தடுப்பு சட்ட வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இல்லாமலே, விசாரணையை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டாலும், வழக்கு பாதிக்காதவாறு சாட்சிகள் விசாரணையை தொடர வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.