நீதித்துறையை அவமதிக்கும் பேச்சு வீடியோவை பார்த்த பின் உத்தரவு சீமான் மீதான வழக்கில் ஐகோர்ட் முடிவு
நீதித்துறையை அவமதிக்கும் பேச்சு வீடியோவை பார்த்த பின் உத்தரவு சீமான் மீதான வழக்கில் ஐகோர்ட் முடிவு
ADDED : ஏப் 17, 2025 02:43 AM
சென்னை:நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக, சீமானுக்கு எதிராக தொடரபட்ட வழக்கில், சீமான் பேசிய வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 2024ம் ஆண்டு நவ., 17ல் பேட்டி அளித்தார். அந்த பேட்டி, நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளதாக கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், தமிழக டி.ஜி.பி.,க்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை, சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சீமான் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து, எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், நீதித்துறை குறித்து சீமான் கண்ணியக் குறைவாக பேசியதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'சீமான் பேசியதில் இந்த சம்பவம் மட்டும் தான் அவமதிக்கும் விதமாக உள்ளதா? சீமானின் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வழக்கு தொடர்ந்தால், இதுவரை நுாற்றுக்கணக்கான வழக்குகளை தாக்கல் செய்யப்பட வேண்டியிருக்குமே' என, கேள்வி எழுப்பினார்.
பின், நீதித்துறையை சீமான் அவமதித்தாக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை பார்த்து விட்டு, வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பதாக கூறி, வழக்கை தள்ளி வைத்தார்.