அமைச்சர் உதவியாளருக்கு டெண்டர் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் உதவியாளருக்கு டெண்டர் ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 15, 2024 01:42 AM
மதுரை:சிவகங்கை மாவட்ட சாலை பணிக்கு தமிழக அமைச்சர் பெரியகருப்பனின் உதவியாளருக்கு 'டெண்டர்' வழங்கியதை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. மறு டெண்டர் நடத்த உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், பெரியகிளுவாச்சி கந்தசாமி தாக்கல் செய்த மனு:
நான் அங்கீகரிக்கப்பட்ட முதல்நிலை கான்ட்ராக்டர். சிவகங்கை மாவட்டம், கீழையூர் - தாயமங்கலம், சாலைகிராமம் - சருகணி வரை சாலையை பலப்படுத்த மதுரை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் பிப்., 2ல் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மதிப்பு, 175.40 லட்சம் ரூபாய். டெண்டரில் பங்கேற்க நானும், சிலரும் விண்ணப்பித்தோம். டெண்டர் பிப்., 28ல் உறுதி செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் தனி உதவியாளர் இளங்கோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் அரசிடம் சம்பளம் பெறுகிறார். டெண்டரில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். டெண்டரில் பங்கேற்க அவருக்கு தகுதி இல்லை. டெண்டர் உறுதி செய்யப்பட்டதின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். டெண்டர் அறிவிப்பு மற்றும் அதை உறுதி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மறு டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதில் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவில்லை. டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மறு டெண்டர் நடத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

