அவர் பெரியாறை கேட்கிறார்; இவர் காவிரியை கேட்கிறார்: 'ஜோக்' அடிப்பது போல் துரைமுருகன் 'குட்டு'
அவர் பெரியாறை கேட்கிறார்; இவர் காவிரியை கேட்கிறார்: 'ஜோக்' அடிப்பது போல் துரைமுருகன் 'குட்டு'
UPDATED : ஏப் 18, 2025 05:09 AM
ADDED : ஏப் 18, 2025 12:48 AM

சென்னை: சட்டசபையில் நீர்வளத் துறை தொடர்பான விவாதம் நடந்தபோது, ஒரு எம்.எல்.ஏ.,வின் கேள்விக்கு தொடர்பில்லாமல், மற்றொரு எம்.எல்.ஏ., கேள்வி கேட்டார். 'இரண்டும் வெகு துாரம்' என அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செந்தில்நாதன்: சிவகங்கை ஒன்றியம், சின்ன பருத்திக்குடி கண்மாயை துார் வாரி, மடை மற்றும் கலிங்கு கட்டப்படுமா?
அமைச்சர் துரைமுருகன்: நிதி நிலைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.
செந்தில்நாதன்: பெரியாறு நீர்ப்பாசன வசதி பெறும் சின்ன பருத்திக்குடி, பெரிய பருத்திக்குடி கண்மாய் உட்பட, 400க்கும் மேற்பட்ட கண்மாய்களை துார் வாரி, மடை கட்டி தர வேண்டும்.
பெரியாறு நீர்ப்பாசன வசதி பெறும் கண்மாய் அருகில் உள்ள, வீரக்கண்மாய் உள்ளிட்ட எட்டு கண்மாய்களை, பெரியாறு பாசன ஆயக்கட்டு கண்மாய் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: வைகை ஆற்றுக்கு கீழே, பெரியாறு பிரதானக் கால்வாய், 58 கி.மீ., பயணித்து இரண்டாக பிரிகிறது. சின்ன பருத்திக்குடி கண்மாயில் இரண்டு மடைகள் பழுதாகி உள்ளன. இவை இந்த ஆண்டு சீரமைக்கப்படும். கண்மாயை துார் வாரி கரையை பலப்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
செந்தில்நாதன்: பெரியாறு நீர்ப்பாசன நீட்டிப்பு கால்வாயில் பழுதடைந்த சிமென்ட் கட்டுகளை சீரமைக்க வேண்டும்.
காளையார்கோவில் ஒன்றியம், முடிக்கரை அருகே, நாட்டார் கால்வாய் குறுக்கே, தடுப்பணை கட்டித்தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 6,000 கண்மாய்களை சீரமைக்க, சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: நிச்சயம் கவனிக்கப்படும்.
தி.மு.க., - அன்பழகன்: கொள்ளிடம் ஆற்றில், கல்லணை முதல் அணைக்கட்டு கீழணை வரை, தடுப்பணை எதுவும் இல்லை. மூன்று அணைக்கட்டுகள் கட்டித் தர வேண்டும்.
இல்லையெனில் முடிதாங்கி ஊராட்சியில், ஒரு தடுப்பணையாவது கட்ட வேண்டும். அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.,க்கள் கண்ணன், பிரபாகரன் ஆகியோர் இணைந்து கேட்கிறோம்.
அமைச்சர் துரைமுருகன்: நீங்களே கேட்டால் போதும்; பரிந்துரை தேவையில்லை. முதல் உறுப்பினர் கேட்டது பெரியாறு பாசனம். இவர் கேட்பது காவிரி பாசனம். இரண்டுக்கும் வெகு துாரம். இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.

