வீட்டில் நுழைந்த கொள்ளையரை வெளிநாட்டிலிருந்து விரட்டியவர்
வீட்டில் நுழைந்த கொள்ளையரை வெளிநாட்டிலிருந்து விரட்டியவர்
ADDED : ஜன 02, 2025 01:16 AM

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை அடிக்க புகுந்த மர்ம ஆசாமிகளை வெளிநாட்டில் இருந்தவாறு வீட்டின் உரிமையாளர் விரட்டி அடித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு ரஹமத் கார்டனைச் சேர்ந்தவர் சலீம், 58. இவரது மகன் ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இன்ஜினியராக பணிபுரிகிறார்.
கடந்த வாரம் தன் மகனை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சலீம், மஸ்கட் சென்றார்.
வீட்டில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டிருந்ததால், வெளிநாட்டில் இருந்த நிலையிலும் அடிக்கடி கேமராவை கண்காணித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு இருவர் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நடமாடுவதைக் கண்டார். இருவரும் கையுறை அணிந்திருந்தனர். வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று கதவை உடைக்க முயற்சித்தனர்.
இதைப் பார்த்த சலீம், உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தன் வீட்டுக்குள் இரு கொள்ளையர் புகுந்துள்ள தகவலை கூறியுள்ளார்.
அவர்களும், வீட்டில் இருந்து வெளியே வந்து, 'திருடன், திருடன்' என கூச்சலிட்டனர். இதனால், கொள்ளையர் பின் கதவை திறந்து பின்பக்க சுவர் வழியாக ஏறிக் குதித்து, தப்பி சென்று விட்டனர். கோட்டார் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
கொள்ளை முயற்சி நடந்த வீட்டின் அருகே, கட்டட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்த சிலரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

