அமைச்சர் பதவிக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார்: சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?
அமைச்சர் பதவிக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார்: சட்ட வல்லுநர்கள் சொல்வது என்ன?
UPDATED : ஏப் 12, 2025 05:34 AM
ADDED : ஏப் 12, 2025 01:21 AM

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன்: சைவம், வைணவம் இரண்டும் ஹிந்து மதத்தின் முக்கிய பிரிவுகள். இவை சார்ந்த நம்பிக்கைகள் பற்றி, பொது நிகழ்வில் அருவருக்கத்தக்க வகையில் பேசியது சரியல்ல. அவரின் இந்த பேச்சுக்கு, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சைவம், வைணவம் சார்ந்து இருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனித்தனியே வழக்கு தொடர முடியும்.
வழக்கறிஞர் ஆர்.எஸ்.ரவீந்திரன்: அமைச்சர் பொன்முடியின் பேச்சு, ஆபாசமான, அருவருக்கத்தக்கது. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் மட்டுமின்றி, வயதிலும் மூத்தவர். அரசாங்கம் என்பது எல்லா மக்களுக்கானது; குறிப்பிட்ட மதம், சமயத்துக்கானது அல்ல. கொள்கை, தத்துவம் எல்லாம் என்பது எப்படி இருந்தாலும், அரசு என்கிறபோது பொதுவானது.
அப்படியிருக்கும்போது, பொதுவெளியில் கொச்சையாக, ஆபாசமாக பேசி இருக்கக் கூடாது. கட்சி பதவி பறிப்பு மட்டும் போதாது; பகிரங்கமாக பொதுமக்கள் மத்தியில், அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
அமைச்சர் சார்ந்து இருக்கும் கட்சி, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானது என்ற பெயரை, அவர்களின் செயல்பாடு வாயிலாக ஏற்கனவே பெற்றுஇருக்கிறது. கருத்துரிமை என்பது ஆபாசமாகவோ, பெண்களை இழிவுபடுத்தி பேசுவதற்கோ அல்ல.
அமைச்சராக இருக்கும்போது, மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும். பொதுவெளியில் பேசும்போது, இன்னும் கூடுதல் கவனத்துடன் பேசவேண்டும். பொதுவெளியில் மூன்றாம் தரப் பேச்சாளர் போல பேசக்கூடாது. அவரின் பேச்சுக்கு எதிராக குற்றவியல் மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவதற்கான முகாந்திரம் உள்ளது.
வழக்கறிஞர் நர்மதா சம்பத்: அமைச்சர் என்கிற பொறுப்பில் உள்ளவர், 'இந்திய அரசியல் அமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும் மாறாப்பற்றும் கொண்டிருப்பேன்' எனக் கூறித்தான் பதவி ஏற்கிறார். உறுதிமொழி ஏற்றிருக்கும் ஒரு பதவியில் இருக்கும்போது, பொதுவெளியில் இதுபோல பேசியது மிகவும் தவறு. அவ்வாறு பேசியிருக்கவும் கூடாது. தனிப்பட்ட நம்பிக்கை, கடவுள் மறுப்பு என, எதைக் கொண்டிருந்தாலும், சொந்த வெறுப்பு என, எதுவும் இருக்கக் கூடாது.
துவக்க காலத்தில் பேராசிரியராக பணிபுரிந்து உள்ளார். அவரின் பேச்சுகளை கேட்கும்போது, அவர் அமைச்சராக நீடிக்கத் தகுதி அற்றவர். அமைச்சர் என்ற பொறுப்புக்கான அடிப்படை தகுதியை இழந்து விட்டார் என்றே கூற வேண்டும்.
கல்வி சார்ந்த முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அப்படியிருக்கும்போது, இதுபோல பேசியது அவரின் கல்வியில் குறைபாடு இருப்பதாகவே தோன்றுகிறது.

