பா.ஜ.,வில் இணைந்தது சரத்குமாரின் ச.ம.க., துாங்கும் போது மனதில் தோன்றியது என்கிறார்
பா.ஜ.,வில் இணைந்தது சரத்குமாரின் ச.ம.க., துாங்கும் போது மனதில் தோன்றியது என்கிறார்
ADDED : மார் 12, 2024 11:22 PM

சென்னை:நடிகர் சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற, அரசியல் கட்சியை நடத்தி வந்தார். அவர், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்திற்கு அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது, அண்ணாமலை முன்னிலையில், தன் சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வில் இணைப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.
மனதை தாக்கியது
இந்நிகழ்ச்சியில் சரத்குமார் பேசியதாவது:
ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்போது, எத்தனை 'சீட்' நிற்கப் போறீங்க; யாருடன் கூட்டணி என்று கேட்கின்றனர்.
இது, என் மனதை தாக்கிக் கொண்டிருந்தது. ஒரு இயக்கம் ஆரம்பித்ததற்கு எத்தனை சீட் கொடுப்பர்? என்ன 'டிமான்ட்' வைக்கலாம் என்பது மட்டும் தான் அரசியலா?
இதனால், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற கொள்கை அடிபட்டு விடுகிறது. இந்த பாதையில், நானும் செல்ல வேண்டுமா என்று எண்ணினேன்.
இரவு துாங்கும்போது, நம் வலிமையை எல்லாம், வலிமையான மோடிக்கு அர்ப்பணித்து, அவருடன் இணைந்து செயல்பட்டால் என்ன என்று என் மனதில் தோன்றியது. உடனே, அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, என் எண்ணத்தைப் பற்றி தெரிவித்தேன்.
அதற்கு அவர், 'எந்த முடிவு எடுத்தாலும், நான் உங்களுடன் உறுதுணையாக இருப்பேன்'என்றார். இந்த விபரத்தை அதிகாலை அண்ணாமலையிடம் தெரிவித்தேன்.
தலைவன் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழி என்று என்னுடன் பயணிப்பர். இந்த தேர்தலை, பா.ஜ.,வுடன் சந்திப்போம் என்று ஏற்கனவே கூறினோம். இன்று, பா.ஜ.,வுடன் இணைவதை பெருமையுடன் கூறுகிறோம். மக்கள் பணியை தொடர்கிறோம். மக்களுக்காக எடுக்கப்பட்ட முயற்சி. இது, ஒரு எழுச்சியின் துவக்கம்.
நேர்மை
சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த மோடி, நாட்டின் பிரதமராக மாறியுள்ளார். கடுமையான உழைப்பு, உறுதி, நேர்மையால் அவருக்கு கிடைத்தது.
பெருந்தலைவர் காமராஜர் போல, ஒரு ஆட்சியை தரக்கூடியவர் மோடி. தொடர்ந்து தேர்தலை சந்திப்பதற்கு பதில், நம் சக்தியை மற்றொரு சக்தியுடன் இணைந்து செயல்படவே பா.ஜ.,வில் இணைந்துள்ளோம்.
அண்ணாமலை முன்னிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்துக் கொள்கிறோம்.
இன்று போதைப்பொருள், இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்றால்,மோடியால் தான் முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

