ரூ.121 கோடியில் கோவில் பணிகள் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ரூ.121 கோடியில் கோவில் பணிகள் அடிக்கல் நாட்டினார் முதல்வர்
ADDED : பிப் 18, 2025 05:39 AM

சென்னை: ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக, 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி, ஈரோடு பண்ணாரி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை எழும்பூர் சீனிவாச பெருமாள் கோவிலில், புதிய திருமண மண்டபம்; திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
திருவள்ளூர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னை கோவில்பதாகை, சுந்தரராஜ பெருமாள் கோவிலில், பசுக்கள் காப்பகம் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மூன்று பொது சுகாதார வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நாமக்கல் நரசிம்மசுவாமி கோவில் பணியாளர் குடியிருப்புகள்; செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவிலில், புதிய திருமண மண்டபம்; கோவை மாவட்டம் அனுமந்தராயசுவாமி கோவிலில் புதிய ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட உள்ளன.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைக்கப்பட்ட பொது தரிசன முறை வரிசை பகுதி, நிர்வாக அலுவலகக் கட்டடம், கலையரங்கம் ஆகியவற்றையும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை அழகர்கோவில் வண்டிகேட் நுழைவாயில் முதல் சோலைமலை முருகன் கோவில் மற்றும் ராக்காயி அம்மன் கோவிலுக்கு, தார்சாலை, தடுப்பு சுவர், மழைநீர் வடிகால் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
கள்ளழகர் கோவில் மேற்குப்புற கோட்டை சுவர் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இவை உட்பட ஏழு கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலர் மணிவாசன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

