அரசு மருத்துவமனைகளுக்கு நிதி பெற சுகாதார அறக்கட்டளை
அரசு மருத்துவமனைகளுக்கு நிதி பெற சுகாதார அறக்கட்டளை
ADDED : ஆக 21, 2025 01:26 AM
சென்னை:'சமூக மற்றும் பெரு நிறுவனங்களின் பங்களிப்பு நிதியை பெற்று, அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த தனி பிரிவு அமைக்கப்படும்' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை பெற, 'தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை' உருவாக்கி, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தலைமையில் இயங்கும் அறக்கட்டளையில், தமிழக சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்ட இயக்குநர், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர், மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குநர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர், மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், நிதித்துறை இணை செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அறக்கட்டளை நிர்வாக குழு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கூடி, அறக்கட்டளையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.