ADDED : ஏப் 29, 2026 02:01 AM
சென்னை: 'தமிழகத்தில் கோவை, நீலகிரி உட்பட ஆறு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வடக்கு தெலுங்கானா முதல், தமிழகத்தின் குமரிக்கடல் வரை, கர்நாடகா, ராயலசீமா வழியாக, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில், சில இடங்களில், நாளை இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய, ஆறு மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் மே 2 வரை, அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில், அதிக வெப்பம் காரணமாக, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 39 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.
