12 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
12 மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : டிச 16, 2024 05:48 AM

சென்னை: 'தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில், 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
இந்த அமைப்பு உருவானதும், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யலாம்.
நாளை
நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும். இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், புதுக் கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யலாம்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்காலில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம்.
தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.