ADDED : ஏப் 04, 2025 01:36 AM
சென்னை:'தமிழகத்தில், 17 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று காலை வரை, தென்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில், ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
துாத்துக்குடி
இதன்படி, 106 இடங்களில், 1 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரியில், அதிகபட்சமாக, 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், தலா, 9; மதுரை விமான நிலைய பகுதியில், 7; விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம், சிவகங்கையில் தலா, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல்
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.