ADDED : ஏப் 06, 2026 04:30 AM

சென்னை: 'தமிழகத்தில், விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தேனி மாவட்டம், பண்ணைபுரம் பகுதியில், 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில், தலா, 7; வேலுார் மாவட்டம், பொன்னை அணை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, நீலகிரி மாவட்டம் பார்வூட், கடலுார் மாவட்டம் தொழுதுார், விருதுநகர் மாவட்டம் சாத்துார் பகுதிகளில், தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்து, மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில், இன்று கனமழை பெய்யலாம்.
தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்றும், நாளையும், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன் ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
