ADDED : மே 11, 2026 02:31 AM

சென்னை: 'தென்மேற்கு வங்கக்கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில், 17 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, நாலுமுக்கு, 16; காக்காச்சி, 15; துாத்துக்குடி மாவட்டம் பெருங்குளம், 14; திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, 13; ராமநாதபுரம் தங்கச்சிமடம், 8; ராமேஸ்வரம், 7 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி, 5.8 கி.மீ., உயரம் வரை நிலவுகிறது.
இதன் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடலில், அடுத்த, 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
வடக்கு உள்கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரையிலான வளிமண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மே, 15 வரை மிதமான மழை தொடரலாம். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், நாளை கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில், இன்று முதல் மே, 12 வரை, சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
