ADDED : ஆக 08, 2025 11:47 PM
சென்னை:தமிழகத்தில் இன்று, ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, ராணிப் பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் காவேரிப் பாக்கத்தில் தலா, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலுார் மாவட்டம் அம் முண்டி, திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு ஆகிய இடங்களில் தலா, 7; வேலுார் மாவட்டம் காட்பாடி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, திருவண்ணாமலை வெம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திராவில் இருந்து, தமிழக கடலோர பகுதி வழியாக, வடக்கு இலங்கை வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 14 வரை, தமிழகத்தில் மிதமான மழை தொடரும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.