ADDED : ஜூன் 27, 2026 12:02 AM

சென்னை: 'தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஆறு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருப்பத்துார் மாவட்டம் ஆலங்குளம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, சென்னை மேடவாக்கம் ஆகிய இடங்களில், தலா, 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
கடலோர ஆந்திரா முதல், மத்திய மஹாராஷ்டிரா வரை, தெலுங்கானா வழியாக வளிமண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப் படும், அதிகபட்ச வெப்பம், 37 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாகக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
