ADDED : நவ 15, 2024 02:48 AM
சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், ராமநாதபுரம் முதல் கடலுார் வரையிலான ஏழு மாவட்டங்களில் இன்று (நவ., 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில், கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டாலும், இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதே போன்று, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 20ம் தேதி வரை இந்நிலை தொடர வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், கடலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.